சினிமா பாணியில் விரட்டிய போலீஸ்.. டீசல் போட்டு பணம் கொடுக்காமல் தப்பித்த நபர் சிக்கியது எப்படி?

திருச்சி அருகே பெட்ரோல் பங்கில் டீசல் போட்டு விட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபரை சினிமா பாணியில்  போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ. 2ஆயிரத்திற்கு டீசல் போட்டுள்ளார். பின்னர் பணம் கொடுக்காமல் ஜீப்பை எடுத்துக் கொண்டு திருச்சியை நோக்கி தப்பியுள்ளார்.

இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலம் திருச்சி-சேலம் சாலையில் பேரிகார்டு வைத்து ஜீப்பை மடக்கிய போது இடித்து தள்ளிவிட்டு தப்பிச் செல்கிறார்.

பின்னர் போலீசார் தகவல்படி நெச்சியம், சமயபுரம் நம்பர் 1டோல்கேட்டில் போலீசார் மடக்கிய போதும் அங்கிருந்தும் தப்பிச் சென்று லால்குடியை நோக்கி தப்பிச் செல்கிறார். இதனைத் தொடர்ந்து லால்குடி நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், லால்குடி ரவுண்டானாவில் பேரிகார்டை வைத்து ஜீப்பில் தப்பிவந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஜவகர்லால் நேருவின் 48வயது மகனான சண்முகம் என தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts