உதகையில் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவலரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபயணத்தை முடித்து கொண்ட அண்ணாமலை, அன்று மாலைஉதகை ஏ.டி.சி. நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது, உதகை காஃபிஹவுஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த ‘ஹில் காப்’ காவலர் கணேசன் கூட்டத்துக்குள் நுழைந்து, அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அவர் சீருடையில் அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது.
பொதுவாக அரசுப் பணியாளர்கள், தாங்கள் பணியில் இருக்கும்போது, அரசு தொடர்பில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது விதி.
ஆனால் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது காவலர் கணேசனை ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.