நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தம் செய்யப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தென்மாவட்ட மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்படும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை கழகத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.
அந்தவகையில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த 6 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009 ம் ஆண்டு 10 முதுநிலை பொறியியல் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பொறியியல் பாடப் பிரிவிலும் 25 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு 250 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 4 முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 6 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை கழகத்தால் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், மாணவர் சேர்க்கை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது தென் மாவட்ட மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.