உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக பிராத்திக்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப அரசியல் தலைவர்கள் திரைபிரபலங்கள் என பலரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவும் கேப்டன் விஜயகாந்த் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா கூறியதாவது :
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!! என தனது ட்விட்டர் பதிவில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.