இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோனோர், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாகவே மாதச் சம்பளத்தை பெற்று வருவதாகவும், அதில் பெரும்பாலும், 60% ஊழியர்கள் பேரம் பேசி ஊதியத்தை (salary) பெறாமல் பணியில் சேர்வதாகவும் ‘Glassdoor’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அதிக வருமானப் பணிகளில் சேர்வதற்கான திறன்களைப் பெற்றிருக்கக் கூடிய இளைஞர்கள் கூட, குறைந்த ஊதியத்தில் (salary) சேர ஒப்புக் கொள்கின்றனர்.
இதற்கு, பேரம் பேசினால் பணிவாய்ப்பை இழந்து விடுவோமோ என்ற அச்சமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், இது தேவையற்ற அச்சம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால், சரியான சம்பளத்தை கேட்டுப் பெறுவது எப்படி..?
ஒரு புதிய நிறுவனத்தில் நேர்காணல் முடிந்தவுடன், பணி அழைப்பு கடிதம் (Job Offer letter) பெற்றவுடன், முதலில் அந்த அழைப்புக் கடிதத்தில் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ள சம்பள விவரங்களை முழுமையாக படிக்க வேண்டும்.
பின்னர், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை சம்பளம், சலுகைத் தொகை, போனஸ் ஆகியவற்றை விரிவாக கணக்கிட வேண்டும். மேலும், அந்த சலுகைத் தொகுப்பில் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, குடும்பத்தினருக்கான ஆயுள் காப்பீடு ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கலாம்.
அத்துடன், வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள பிடித்தங்கள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, ப்ரோஜெக்ட் சூப்பர்வைசர் பதவிக்கான அழைப்பு கடிதத்தில் ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். இதில், பிடித்தங்கள் போக கையில் வாங்குவது ரூ.35,000 வருவதாக வைத்துக் கொள்வோம்.
இந்த பணிக்கான சம்பள வரம்புகளை Glassdoor, Linkedin, Payscale போன்ற இணையதளங்கள் மூலம் ஒப்பீடு செய்து அதே பணிக்கு மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் நபரின் சம்பளம் குறித்து ஆய்வு செய்வதன் மூலம், விரைவான, தீர்க்கமான முடிவை நம்மால் எடுக்க முடியும்.
ஆனால், ஒருவேளை பிடித்தம்போக நீங்கள் எதிர்ப்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என்றால், அது குறித்து அந்த நிறுவனத்தின் எச்.ஆர்-ஐ தொடர்பு கொண்டு வெளிப்படையாக பேசுங்கள்.
நீங்கள் எதிர்பார்க்கும் மற்றும் பெற நினைக்கும் சம்பளம் குறித்தான காரணங்களை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துங்கள். இதன்மூலம் உங்கள் பணியும், நீங்கள் கேட்கும் சம்பள தொகையும் முறையாக இருந்தால் அதை உங்கள் உயர் அதிகாரிகள் ஏற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
அதேசமயம், நீங்கள் கேட்கும் சம்பளத்தை HR ஏற்றுக்கொள்வார் என்பதயும் உறுதியாக கூற முடியாது. ஏனெனில், நீங்கள் கேட்கும் சம்பள தொகை அவர்கள் அந்த பதவிக்கு ஒதுக்கிய வரம்புக்குள் இருக்க வேண்டும். எனவே, அவர் சொல்லும் பதிலையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
ஆனால், நீங்கள் எதிர்ப்பார்த்த சம்பளத்தை கேட்காமல் இருப்பது மிகப்பெரிய தவறாக மாறிவிடக் கூடும். ஆகவே, நீங்கள் கேட்கும் சம்பள தொகை முறையாக இருந்தால் அது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், அதனை நழுவ விட வேண்டாம்.