புதுச்சேரி சட்டபேரவையில் 2022-2023ம் ஆண்டிற்கான ரூ.10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு உதவி தொகை 1,729 கோடி ரூபாய் வழங்க உள்ளது. மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாய், மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியில் கடன் திரட்ட 1,889 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
பட்ஜெட்டில், குடிமை பொருள் வழங்கள் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால், குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். உர விற்பனை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும். அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிக்கு தலா 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.