BJP election manifesto : பாஜகவின் தேர்தல் அறிக்கை குப்பை தொட்டியில் போட வேண்டிய ஒன்று என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமை காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் மனோதங்கராஜ் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
மோடி தலைமையிலான பா.ஜ.க அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் குப்பையில் போடவேண்டிய ஒன்று. அதில் உப்பும் இல்லை, சப்பும் இல்லை… பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்துவது மக்களுக்கு தேவையா?
இதனை நடைமுறைப்படுத்தினால் விலைவாசி குறையும், பசி பட்டினிதீருமா? படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துவிடுமா? மூடும் நிலையில் இருக்கும் சிறுகுறு தொழிற்சாலைகள் சீரடைந்துவிடுமா?
விவசாய பெருங்குடி மக்களின் பிரச்சனைகள் தீருமா? என்னதான் செய்யப் போகிறார்கள்?
தேர்தல் வாக்குறுதிபடி பழங்குடியின ஆண்டாக 2022ஐ அறிவிக்கப்போகிறார்கள். இது ஒரு தேர்தல் வாக்குறுதி.
ஆனால், மணிப்பூரில் பழங்குடியின மக்கள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெண்கள் நிர்வானமாக சாலையில் அழைத்துச் செல்லப்பட்டார்களே அதற்கு நீதி கூட வழங்கமுடியவில்லை.
அதுகுறித்து தேர்தல் அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை. நமது ஜனாதிபதியான பழங்குடியினத்தை சேர்ந்த முர்மு அவர்கள் ஏன் ராமர்கோயில் திறப்புவிழாவுக்கு அழைக்கப்படவில்லை.
ஏன் பாராளுமன்ற கட்டிடத் திறப்புவிழாவுக்கு அழைக்கப்படவில்லை? எல்லாம் மர்மமாக இருக்கிறது. எனவே மக்களுக்கான எந்த திட்டமும் இல்லாத, வெற்றுக் காகிதமான பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள்.
இவ்வாறு அந்த வீடியோ பதிவில் அவர் கூறியுள்ளார் BJP election manifesto.
வீடியோ லிங்க் : பாஜகவின் தேர்தல் அறிக்கை குப்பை தொட்டியில் போட வேண்டிய ஒன்று – மனோ தங்கராஜ்!