தமிழ்நாட்டில் கடந்த ஜூன் முதல் இரண்டு வாரங்கள் வெயில் கொளுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து நல்ல மழை பெய்து குளிர்வித்தது. இதனால் வெப்பம் குறைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அதே போல் 19 ஆம் தேதி முதல் 22-ந்தேதி வரை வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தனது அறிக்கையில் கூறி உள்ளது