கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்;
தமிழக பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் மற்றும் பதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
![rains-thunder-lightning-in-nellai-kanyakumari-districts](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2022/03/Chennai-rain-website.jpg?resize=850%2C450&ssl=1)
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இன்றும் தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.