சென்னையில், நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையால் 127 இடங்களில் மழைநீர் (rainwater) தேங்கி உள்ளதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில், நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டு மழை பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கண்காணிப்பு அறைகளின் மூலம் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பல்லவேறு இடங்களில் இருந்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போல் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் புகார்கள் மற்றும் cctv காட்சிகளின் அடிப்படையிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை தயார் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில், காலை 9 மணி நிலவரப்படி, கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதை, வேப்பேரி சாலை, தாம்பரம் மாநகராட்சி சுரங்க பாலங்கள், அண்ணா சாலை உட்பட 127 இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாலை 2.30 மணி முதல் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில், சிறிய அளவில் இருந்து பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்காக, மழை நீர் தேங்கினால் அவற்றை உடனடியாக வெளியேற்றும் வகையில், மொத்தம் 593 இடங்களில் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 169 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் வழங்கள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 300 தூர்வாரும் இயந்திரங்களும் மற்றும் 57 அதிவேக கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வழங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.