உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட படமாக உருவாகி உள்ள “இந்தியன் 2” படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய உதவி செய்துள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த மெகாஹிட் திரைப்படம் தான் இந்தியன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.
இந்த படத்திலும் கமல்ஹாசன் தான் நயகனாக நடித்துள்ளார். படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ள நிலையில், வரும் நவம்பர் 7-ந் தேதி நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 3-ந் தேதி இந்தியன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதனிடையே தான் தற்போது இந்தியன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட உள்ள பிரபலம் பற்றிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இந்தியன் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் தான் ரிலீஸ் செய்ய உள்ளார் எனவும், நாளை மாலை 5.30 மணிக்கு கிளிம்ஸ் வீடியோவை வெளியிடுவார் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.