வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில்..,
“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு தாமதமாகி வரும் நிலையில், சூழலின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, வன்னியர் 10.50 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை வழங்க சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கடந்த 02.04.2022-ஆம் நாள் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதைத் தொடர்ந்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர் 08.04.2022&ஆம் நாள் தங்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, 7 மாதங்களுக்குப் பிறகு, கடந்த நவம்பர்17-ஆம் நாள் உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட ஆய்வு வரம்புகளுடன் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்பின் சுமார் இரு மாதங்கள் கழித்து கடந்த ஜனவரி 12-ஆம் நாள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்ற கூடுதல் ஆய்வு வரம்பை நிர்ணயித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது. அதன்படி ஆணையம் கடந்த ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க முடியும்.
வரும் 9ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம் 15-ஆம் நாளுக்குள் நிறைவடைந்து விடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வன்னியர் இடஓதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், 2024-25ஆம் கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பே இல்லை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் கால தாமதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான புள்ளிவிவரங்களை அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் திரட்டி விட முடியும். ஆனால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 9 மாதங்கள் காலக்கெடு வழங்கியும் இன்று வரை பரிந்துரை அளிக்கப்படவில்லை.
பிகார் மாநிலத்தில் 45 நாட்களில் 13 கோடி பேரின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை நிலை உள்ளிட்ட 19 வகையான விவரங்கள் வீடுவீடாக சென்று திரட்டப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அதில் 10% உழைப்பு கூட தேவைப்படாத வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான விவரங்களைத் திரட்ட தமிழக அரசாலும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தாலும் முடியவில்லை என்றால், அதற்கான காரணம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை என்ற முடிவுக்குத் தான் வர வேண்டியிருக்கிறது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, 08.04.2022, 04.07.2022, 10.09.2022, 17.02.2023, 30.04.2023, 10.05.2023 ஆகிய நாள்களில் 6 முறை தங்களுக்கு கடிதங்களை எழுதியிருக்கிறேன். குறைந்தது 10 முறையாவது தங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதில் தேவையில்லாமல் செய்யப்படும் கால தாமதம் வன்னிய மக்களிடமும், இளைஞர்களிடமும் பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். தைலாபுரம் தோட்டத்தில் 06.10.2023ஆம் நாள் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்திலும் இதே கருத்து தான் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது.
தேவை ஏற்பட்டால் எத்தகைய போராட்டங்களையும் நடத்த பா.ம.க.வும் தயாராகவே இருக்கிறது. ஆனாலும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்கள், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு வரும் 11-ஆம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையை பெற வேண்டும். அதனடிப்படையில், வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முதலமைச்சராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன்” என்று கூறியுள்ளார்.