தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை மு.க ஸ்டாலின் வி.பி.சிங்கின் சிலைத் திறப்பு விழாவில் வெளியிடுவதன் மூலம் வி.பி.சிங்கிற்கு உண்மையான மரியாதையை செலுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது..
”இந்தியாவின் சமூகநீதிக் காவலரும், எனது மதிப்பிற்குரியவருமான வி.பி.சிங்-கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலை முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது சமூகநீதிக் காவலருக்கு செய்யப்படும் மிகப்பெரிய மரியாதை ஆகும். இது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், வி.பி.சிங்கின் கனவான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தான் அவருக்கு தமிழக அரசு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் நான் வலியுறுத்தியதன் பயனாக, அதே ஆண்டில் அதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி 27% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அதைத் தொடர்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அக்கோரிக்கையை வி.பி.சிங் ஆதரித்தார். 2007-ஆம் ஆண்டில் கடுமையான உடல்நலக் குறைவால் வி.பி.சிங் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகக் குறைபாட்டுக்காக ஒருநாள் விட்டு ஒருநாள் குருதி சுத்திகரிப்பு செய்ய வேண்டியிருந்தது.
அத்தகைய சூழலிலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட வி.பி.சிங், பிரண்ட் லைன் ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், ”மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் நான் 27% இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்து உச்ச நீதிமன்றம் வினா எழுப்பவில்லை. ஆனால், இப்போது வினா எழுப்பும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். அதை ஓராண்டுக்குள் செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதை தேசிய அளவில் செயல்படுத்த வாய்ப்பற்ற நிலையில், மாநில அளவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் செய்ய வேண்டும். இந்தியாவின் சமூகநீதிக் காவலர் என்று வி.பி.சிங் போற்றப்படுவதற்கு காரணம் மிகக் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் மீறி மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியது தான்.
அதனால், அவர் ஆட்சியை இழந்தார்; அதன்பின் வந்த தேர்தல்களில் உயர்சாதி வாக்குவங்கியை இழந்தார்; பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் அவரை முழுமையாக ஆதரிக்கவில்லை. அதனால், அவரது அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
”மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பாக நான் செய்த அனைத்து செயல்களும் சிறப்பானவை என்று பாராட்டப்பட்டன. மண்டல் அறிக்கையை செயல்படுத்திய பிறகு நான் செய்த ஒவ்வொன்றும் நாட்டிற்கு இழைக்கப்பட்ட தீமையாக பார்க்கப்பட்டன. இந்த ஆட்டத்தில் எனது கால் உடைந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற கோலை அடித்து விட்டேன். அந்த விஷயத்தில் மகிழ்ச்சி.
எந்த ஒரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும். ஒரு செயலை செய்துவிட்டு, அதற்கு இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியதாகி விட்டதே என வருத்தப்படக் கூடாது. நான் கொடுத்த விலை மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தியதற்கானது ஆகும்” என்று கூறி தமது அரசியல் துணிச்சலை வி.பி.சிங் வெளிப்படுத்தினார்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு இருந்த அரசியல் துணிச்சல் இப்போது தமிழக முதல்வருக்கு இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு ஆகும். 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் செயல்படுத்திய போது அவருக்கு அரசியல்ரீதியாவும், சமூகரீதியாகவும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாட்டில் அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாவும் எந்த எதிர்ப்பும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் கட்சிகள் தமிழக அரசியலில் துடைத்து எறியப்படும் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஓபிசி மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு கொடுத்து சமூகநீதி வழங்குவதற்கு வி.பி.சிங்கிற்கு எதிராக இருந்த சூழல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி சமுகநீதி வழங்குவதில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், அது குறித்து பேசவும் மு.க.ஸ்டாலின் அஞ்சுவது ஏன்? எனத் தெரியவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு சமூக நீதியை செயல்படுத்துவது தான் சமூகநீதி அரசியல் தலைவர்களுக்கு அழகு.
ஆனால், எந்த இழப்பும், எந்த எதிர்ப்பும் இல்லாமல், நற்பெயரைப் பெற்றுக் கொடுத்து, வரலாற்றில் இடமளிக்கக் கூடிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசின் சார்பில் நடத்த அஞ்சுவது அழகல்ல. எனவே, அனைத்து அச்சம் மற்றும் தயக்கங்களை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வி.பி.சிங்கின் சிலைத் திறப்பு விழாவில் வெளியிடுவதன் மூலம் வி.பி.சிங்கிற்கு உண்மையான மரியாதையை மு.க.ஸ்டாலின் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.