Site icon ITamilTv

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

Spread the love

கொரோனா பரவல் காரணமாக தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்றால் இதுவரை 46 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளதால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.

சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணியில் இருந்து ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின் படி காசிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும் உலகப்புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடைவிதிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் முகுந்தராயர் சத்திரம், குந்துகால் ,நரிப்பையூர், மூக்கையூர் உள்ளிட்ட கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்ல முற்படும் சுற்றுலா பயணிகள் புதுரோடு சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.


Spread the love
Exit mobile version