சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்கு குட்டிகளை (rare monkeys) சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
இதனையடுத்து, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து அவர் கொண்டு வந்து உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, உடமைகளில் இருந்த ஒரு கூடையில் லேசாக அசைவு தெரிந்தது.
இதனைப் பார்த்த சுங்க இலாக அதிகாரிகள் பையைத் திறந்து பாா்த்த போது, அதில் அரிய வகை உயிரினங்களான ஆப்பிரிக்க நாட்டு வனப்பகுதி மற்றும் அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குரங்கு குட்டிகள் இருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த அரிய வகை விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் அந்த பயணியிடம் இல்லாதது உறுதியானது.
இதனையடுத்து, 2 குரங்கு குட்டிகளையும் (rare monkeys) பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், குரங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.