சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்ட விவகாரத்தில் உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,”மழை வெள்ள பாதிப்பு குறித்து பேச அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்கிறார். அப்படி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது என திமுக அரசைப்பார்த்து மக்கள் கேட்கின்றனர். மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைச்சர் போன்ற பொறுப்புகளை வகித்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டுவோம் எனக்கூறிவிட்டு, அதை கூவமாக மாற்றிவிட்டார்.
சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் காட்டிய அக்கறையை மீட்பு பணிகளில் காட்டவில்லை. கார் ரேஸ் நடத்துவதற்கு காட்டிய அக்கறையை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காட்டவில்லை. ஒரு இடத்தில் கூட தேங்காது என்று சொன்னீர்கள். அதை நம்பி தான் மக்கள் இவ்வளவு துயருக்கு ஆளானார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுக்க கூடிய பங்களிப்பு தொகையை தான் தற்போது மத்திய அரசு அளித்துள்ளது.
மத்திய குழுவினரின் ஆய்வுக்கு பின்னரே முழுமையாக நிவாரணம் வழங்குவார்கள். தமிழக நிதி அமைச்சருக்கு இது தெரிந்தும், பாஜக ஆளாத மாநிலங்களில் குறைவான நிவாரண நிதி வழங்குவதாக மக்களை குழப்புகிறார். மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் நிவாரண தொகை என்பது யானை பசிக்கு சோள பொரி போல என முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன் சட்டசபையில் சொன்னார். அதன்படி தான் நடக்கிறது.
பால் தட்டுப்பாடு இல்லவே இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் சொல்கிறார். பொய் பேசலாம், அதற்காக இவ்வளவு பொய் பேச கூடாது.
மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட எதிர்கட்சி தலைவர்களில் முதன்முதலில் எடப்பாடி பழனிச்சாமி தான் களத்திற்கு போனார். அரசு கைவிட்டு விட்டாலும் அதிமுக உதவி வேண்டும் என சொன்னவர் எடப்பாடி. எனவே, அதிமுக வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை எனக்கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. எடப்பாடி பழனிச்சாமி சொன்னதை கேட்டு தான் அரசே செயல்பட்டது.
2015ல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இதேபோல வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என கேட்டவர் ஸ்டாலின். இப்போது நாங்கள் கேட்டால் ஏன் கோபம் வருகிறது.உங்களுக்கு வந்தா இரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என தெரிவித்துள்ளார்.