ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 10 லட்ச ம் ரூபாய்வரை இழந்த ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம். 62 வயதான இவருக்கு 30 வயதில் ஆனந்தன் என்ற மகன் உள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் ரம்மி விளையாட்டில் பங்கேற்று ரம்மி விளையாட தொடங்கினார்.
ஆரம்பத்தில் ரம்மி விளையாட்டில் கொஞ்சம் பணத்தை சம்பாதித்த ஆனந்தன், தொடர்ந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி இரவு பகல் பார்க்காமல் விளையாட்டில் மூழ்கினார்.
காலம் கடந்து பணத்தை இழக்க தொடங்கிய ஆனந்தன், தெரிந்தவர்கள், நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கி மீண்டும் ரம்மி விளையாடியுள்ளார். ஆன்லைன் ரம்மியில் தொடர் தோல்வியை சந்தித்து பணத்தை இழந்த ஆனந்தனிடம் பணத்தை கொடுத்தவர்கள், பணத்தை கேட்டு நச்சரிக்க தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்த ஆனந்தன், 2 ஆம் கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சொந்த ஊருக்கு வந்து வாக்களித்துள்ளார். வாக்களித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும்போது, தனக்கு அதிக கடன் இருப்பதாகவும். பணம் தேவைப்படுவதாகவும் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
பிறகு குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட, ரம்மி விளையாடி 10 லட்ச ரூபாய் வரை இழந்தது தெரியவந்தது. இதனை பெற்றோர் கண்டித்ததால் நேற்று இரவு தூங்குவதற்கு சென்ற ஆனந்தன், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இன்று காலை ஆனந்தனை எழுப்பச்சென்ற பெற்றோர்கள், அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.