மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியின்போது ராட்சத கிரேன் உடைந்து விழுந்ததில் 16 பேர் பரிதமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்தது.
அப்போது கட்டுமான பணியாளர்கள் பாலத்தை இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் ஒன்று, சரிந்து இரும்பு பாலத்தின் மீது விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 16 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
அதையடுத்து உடனடியாக இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இதுவரையிலும், 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் பலர் பாலத்தின் அடியில் சிக்கியிருக்கலாம் என்றும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், மேலும் விபத்தில் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.