தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும், குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது..
“திமுக அரசு, தமிழகத்திற்கு குறுவைப் பருவத்தில் காப்பீடு தேவையில்லை என்று கடந்த ஜூன் மாதம் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதை மத்திய அரசே, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றின்போது பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் இந்தப் போக்கை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த திமுக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது என்றும், உடனடியாக பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி நிலங்களை அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க 26.8.2023 அன்று வெளியிட்ட அறிக்கை மூலம் நான் திமுக அரசை வலியுறுத்தினேன்.
ஆனால், இதுவரை இந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 21.9.2023 அன்று வேளாண்மைத் துறை மந்திரி, 2022-23ஆம் ஆண்டு சம்பா சாகுபடிக்காக 4 தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் சுமார் 2,319 கோடி ரூபாயை காப்பீட்டுத் தொகையாக செலுத்தி உள்ளதாகவும், கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வெறும் 560 கோடி ரூபாயை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பா சாகுபடி மேற்கொண்டு ஓராண்டுக்குப் பிறகு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்ற இழப்பீட்டினை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் வேளாண்மைத் துறை மந்திரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, 2021-22ஆம் ஆண்டு சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு வெறும் 100 ரூபாய் முதல் 600 ரூபாய்வரை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தந்ததாகவும்; பல விவசாயிகளுக்கு இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப்படவில்லை என்றும்; எனவே, 2022-2023ஆம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை பெற்றுத் தருமாறு இந்த திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில், சுமார் 2,319 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள திமுக அரசு, வெறும் 560 கோடி ரூபாயை மட்டும் இழப்பீடாகப் பெற்றுள்ளது. எனவே, 2022-23ம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு, பாதிப்படைந்த வேளாண் நிலங்களை மீண்டும் ஒருமுறை முழுமையாக கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் முழுமையான இழப்பீட்டு (நிவாரணம்) தொகையினை பெற்றுத் தருமாறு வலியுறுத்துகிறேன். இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விபரங்களை முழுமையாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 35,000/- ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், விவசாயிகளின் நலனுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுக அரசை எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.