ருவாண்டாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 99.15 சதவீத வாக்குகளைப் பெற்று தொடர்ந்து, நான்காவது முறையாக அதிபராக பதவி ஏற்கிறார் பால் ககாமே (Paul Kagame).
ஒட்டு மொத்த ருவாண்டா மக்களும் அதிபர் மீது இந்த அளவுக்கு நம்பிக்கை வைப்பதற்கு என்ன காரணம் ? என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 1994ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனக் கலவரத்தில் சுமார் 8 லட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். ஹூட்டு இனத்தவர் நடத்திய இந்த கொடூர இனப் படுகொலையில் துட்சி இனத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் பலியாயினர்.
இனப்படுகொலையில் ஈடுபட்ட சுமார் 20 லட்சம் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை , உள்ளூர் நீதிமன்றங்களில் நடைபெற்றன. இனப் படுகொலை நடத்திய தலைவர்கள் மீதான சட்ட நடவடிக்கை தான்சானியா நீதிமன்றத்தில் நடந்தது.
இனப்படுகொலைக்குப் பிறகு அதிர்ச்சியடைந்து நொறுங்கி கிடந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பிய பெருமைக்குரியவராக அதிபர் பால் ககாமே விளங்குகிறார்.
தோல்வியுற்ற தேசமாக, மனிதர்கள் வாழ தகுதியற்ற தேசமாக , வறுமையுற்று தாழ்வுற்று நின்ற ருவாண்டாவை ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிகவும் அமைதியான மற்றும் மிகவும் முற்போக்கான நாடுகளில் ஒன்றாக மாற்றி அமைத்திருக்கிறார் அதிபர் பால் ககாமே. மேலும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை சிறப்பாக முன்னேற்றி இருக்கிறார்.
2000ம் ஆண்டில் புதிய ருவாண்டா தேசத்தின் அடையாளமாக, புதிய தேசிய கொடி அறிமுகப் படுத்தப்பட்டது. இனப்படுகொலைக்குப் பிறகு ருவாண்டா என்னவாக இருக்க விரும்புகிறதோ அதைப் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தது.
இன்று வரை, அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு “நீலம்”, அறிவொளிக்கு “சூரியன்”, பொருளாதார வளர்ச்சிக்கு “மஞ்சள்” மற்றும் செழிப்பிற்கு “பச்சை” என்று ருவாண்டாவின் தேசிய கொடி, மக்கள் எப்படிப்பட்ட தேசத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான வழிகாட்டியாக உள்ளது.
2000ஆண்டுக்கு முன் வரை, ருவாண்டாவில் முழு நாட்டுக்கும் ஒரே ஒரு தேசிய வானொலி மற்றும் ஒரே ஒரு தொலைக்காட்சி நிலையம் மட்டுமே இருந்தது. இரண்டுமே, அரசுக்கு சொந்தமானதாக இருந்தது.
இப்போதோ சுமார் 45 வானொலி நிலையங்கள் மற்றும் 10 தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளன. பேச்சு சுதந்திரம் முழுமையாக உள்ளது. டிஜிட்டல் தளத்திலும் ருவாண்டா இளைஞர்கள் அதிகப் படியாக இயங்கி வருகின்றனர்.
கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ருவாண்டா கண்டிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில், ருவாண்டாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 400 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே சமயம் உதவிக்கு சார்ந்திருப்பது 80 சதவீதமாக குறைந்திருக்கிறது.
மேலும், 2025ம் ஆண்டுக்குள், முழுவதும் சுயசார்புடைய நாடாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ராணுவத்தினரிடம் பேசும்போது அதிபர் பால் ககாமே ஒரு ராணுவத் தளபதி செயல் படுகிறார். இன்று வரை, அவரை “அஃபாண்டே” தாவது இராணுவத் தளபதி என்று தான் ருவாண்டா இராணுவ வீரர்கள் அழைக்கிறார்கள் .
முதலீட்டாளர்களுடன் பேசும்போது, அதிபர் பால் ககாமே ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபராக, சிறந்த CEO வாக, செயல் படுகிறார். அனைத்து ஒப்பந்தங்களையும், கவனமாக பகுப்பாய்வு செய்து, இதனால் நாட்டுக்கு என்ன பலன் என்பதை ஆராய்ந்து முடிவு செய்கிறார்.
மக்களிடம் பேசும் போது மக்களின் நம்பிக்கைக்குரியவராக, விளங்கும் அதிபர் பால் ககாமே, இளைஞர்களுடன் இருக்கும்போது, ஒரு தந்தையாக, ஒரு வழிகாட்டியாக,ஒரு கல்வியாளராக செயல்படுகிறார்.
கிராமங்கள், நகர்ப்புற மையங்கள், நகரங்கள் மற்றும் சமூகங்களில், மக்கள் தங்கள் பழைய இனக்குழு அடையாளங்களை விட்டு விட்டனர். அதற்கு பதிலாக தேசிய அடையாளத்தைக் கொண்டு எல்லோரும் தங்களை ருவாண்டர்களாக கருதுகின்றனர்.
இதனால் தான் அதிபர் பால் ககாமே 2003, 2010 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 93 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இப்போது 99.15 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகி இருக்கிறார்.
நவீன-ருவாண்டாவின் தந்தை என்று அழைக்கப்படும் அதிபர் பால் ககாமே, ” கடிகாரத்தைத் திருப்ப முடியாதுஉ ஆனால் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும், நடந்தது மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் நமக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறியது போலவே செய்தும் காட்டிருக்கிறார் என்று ருவாண்டா மக்கள் நம்புகிறார்கள்.
அதனால் தான், நடந்து முடிந்த ருவாண்டா அதிபர் தேர்தலில், கிட்டதட்ட 100 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் பால் ககாமே நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்
ஆளும் ருவாண்டா தேசபக்தி முன்னணியின் (RPF) தலைமையகத்தில் இருந்து உரையாற்றிய 66 வயதான அதிபர் பால் ககாமே, மேலும் ஐந்து ஆண்டுகள் நாட்டை வழிநடத்தும் அதிகாரத்தைத் தனக்கு வழங்கிய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் Paul Kagame.