ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
“மகிஷாசுரனை வதம் செய்வதற்காக, ஒவ்வொரு தெய்வங்களிடம் இருந்து ஒவ்வொரு விதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்ற அன்னை பராசக்தி,போர்க்களத்திற்கு செல்வதற்கு முன், அந்த ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டாள். அன்னை வழிபட்ட அந்நாளை நினைவுகூறும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடுகிறோம்.
இந்நாளில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், நம்மை வாழ வைப்பதற்கும் செய்யும் தொழிலில் பயன்படுத்தும் ஆயுதங்களை, இறைவனாகப் பாவித்து, அவற்றால் எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருக்க, அவற்றிற்கு பூஜை செய்து வழிபடுகிறோம். “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாகக் கருதி வழிபடுவதே இதன் ஐதிகம்.
இத்தகைய சிறப்புமிக்க நாளில், மயிலாடுதுறை தருமை ஆதீன மடத்தில் ஸ்ரீ அபயம்பாள் சமேத
ஸ்ரீ தர்மபுரீஸ்வர்ர் கோயிலில் அமைந்துள்ள, ஸ்ரீமகாலெட்சுமி துர்க்காதேவி சந்நதியில் நடைபெறும் பூஜைக்கு ஐ தமிழ் நேயர்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இன்று பெருந்திரளான பக்தர்கள் திரண்டுருக்க, ஸ்ரீ மகாலட்சுமி துர்காதேவி அம்பாள் சந்நதியைச் சுற்றி, ஒன்பது யாகக் குண்டங்கள் அமைத்து, மகேஷ் குருக்கள் தலைமையில் நவசண்டிஹோமம் நடத்தப்பட்டது. தருமை ஆதீன 27 -வது நட்சத்திர குருமணிகள் திருமுன்னர், வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள இசை முழங்க, மங்கள பொருள்கள் யாவும், அம்பாளை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, யாகக் குண்டத்தில் இடப்பட்டன. இறுதியில் பூர்ணாஹூதி செய்யப்பட்டன. அதன்பின் அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையுடன், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு சந்நிதானம் அருட்பிரசாதங்கள் வழங்கினார்கள்.
இதுகுறித்து விஸ்வநாத குருக்கள் கூறுகையில்,
” கடந்த எட்டு நாட்களும் ஒரு அக்னிகுண்டம் வைத்து யாக பூஜைகள் நடந்தன. ஒன்பதாம் நாளான இன்று அம்பாளை சுற்றி ஒன்பது யாகக் குண்டங்கள் வைத்து, ரிக்,யஹூர்,சாம,அதர்வன வேதங்கள்,மற்றும்
தேவி மகா மாத்ய பாராயணம், தேவாரத் திருமறைகள் முறைப்படி ஓதி, அம்பிகைக்கு பிரியமான அனைத்து பொருட்களும் யாகக் குண்டத்தில் இட்டு மிகச் சிறப்பாக சரஸ்வதி பூஜை நடைபெற்றுள்ளது” என்றார்.
உடல் வலிமையின் சக்தியாக, துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக, மஹாலட்சுமியையும், அறிவையும் ,ஆற்றலையும் தரவல்ல சக்தியாக, சரஸ்வதி தேவியையும்,இந்நாளில் வழிபட்டு வளம் பெறுவோம்.
மீண்டும் ஓர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும் வரை, உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ் !