நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை உச்சநீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.
கடந்த ஆண்டு 2022 ஜூலை 22 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது எனவும், சில நீதிபதிகளை தனிப்பட்ட முறையிலும் ஒரு யூடியூப் சேனலில் விமர்சித்து இருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:
இந்த நிலையில், இது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், பேசியதாக சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் இட்ட பதிவை மேற்கோள்காட்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம்:
இதையடுத்து ஒரு யுடியூப் சேனலில் பேசிய சங்கர், மேல் மட்ட நீதித்துறை முழுவதிலும் ஊழல் படிந்திருப்பதாக விமர்சித்தார். இதையடுத்து அவர் மீது இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், தன் மீது தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் , தன் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு காரணமாக கூறும் வீடியோ பதிவுகளையும், சமூக வலைதளப் பதிவுகளும் தனக்கு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அடுத்து நீதிமன்ற பதிவாளரிடம் அதன் நகல்களை சவுக்கு சங்கரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆறு மாத கால சிறை தண்டனை:
நீதிமன்றத்தில் அடுத்த பதில் மனு தாக்கல் செய்ய குறைந்தது 6 வார கால அவகாசம் வேண்டுமென சவுக்கு சங்கர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக இனி எவ்வித பதிவையும் எங்கேயும் குறிப்பாக சமூக வலைத்தள பக்கங்களில் பதிய மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தால் பதில் மனு தாக்கல் செய்ய கேட்ட கால அவகாசம் வழங்க பரிசீலனை செய்யப்படும் என நீதிமன்றம் கூறியது.
ஆனால், அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில், உறுதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.சவுக்கு சங்கரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு ஆறு மாத கால சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டனர்.
மேலும், சவுக்கு சங்கரால் நீதிமன்றம் குறித்து அவதூறாக பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் அனைத்தையும் சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்க தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டனர்.
உத்தரவை நீட்டித்த உச்சநீதிமன்றம்:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை உச்சநீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.
நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாகக் கூறி, சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யவும் கோரி சவுக்கு சங்கர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிறுத்தி வைத்த சிறை தண்டனை உத்தரவை மேலும் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. மேலும், ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.