திருநெல்வேலியில் மாணவர்களை ஆபாசமாக பேசுவதாக வந்த புகாரில் விசாரணை நடத்திய தலைமை ஆசிரியையை பள்ளி ஆசிரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே செயல்பட்டு வரும் தளபதி சமுத்திரம் என்ற பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெய செல்வி என்பவர் வேதியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆசிரியை ஸ்டெல்லா ஜெய செல்வி அங்கு பயிலும் மாணவ, மாணவிகளை மிகவும் அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தனது பெற்றோரிடம் சென்று ஆசிரியை ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். அதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி மீது, தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால், தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.
மேலும் தலைமை ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து அவரது கையில் கடித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.