அஸ்ஸாமில் தொலை தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் 50, 000 ஆசியர்களுக்கு ஸ்கூட்டிகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் 3.78 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு கௌகாத்தியில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, ஒப்புதல் அளித்திருந்தது.
இ-மார்க்கெட் பிளேஸ் போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு அம்மாநில அரசு அரசு ரூ.167.95 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி, தேஜ்பூரில் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் சில பள்ளிகள் உள்ளதால், ஆசிரியர்கள் தாமதமாக பள்ளிக்கு வர வேண்டிய கூழல் ஏற்படுகிறது. எனவே, அத்தகைய 50000 ஆசியர்களுக்கு ஸ்கூட்டிகள் வழங்க உள்ளோம். இதன்மூலம் அவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர முடியும் என்றும் கூறினார்.
மேலும் பேசிய முதலமைச்சர் 2 ஆண்டுகளில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், இது உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வர உதவும் என்றும் கூறினார்.