சந்திரபாபு நாயுடுவை அவரது தன்னலமற்ற பொதுசேவை காப்பாற்றும் என்று அவரது மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கடந்த சனிக்கிழமை (3.09.23) அன்று கைது செய்யப்பட்டார்.
அதையடுத்து சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் அவரது உயிருக்கான அச்சுறுத்தலை கருதி, தனியாக உள்ள ‘சினேகா’ என்ற பிளாக்கில் அவரை அடைத்தனர். சிறையில் உள்ள அவருக்கு ‘7691’ என்ற கைதி எண் ஒதுக்கப்பட்டது.
மேலும், அவருக்கு சிறையினுள் சிறப்பு வசதிகளும், அவருக்கென ஒரு தனி உதவியாளரும், 5 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உணவும், மருந்துகளும் அளிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் நாரா லோகேஷிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நாரா லோகேஷிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தைரியமாக இருக்குமாறும், சந்திரபாபு நாயுடு தவறு செய்யமாட்டார்.. தன்னலமற்ற பொதுசேவை அவரை காப்பாற்றும் என்றும் ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.