மக்கள்தொகையில் சாதிவாரியான மக்களின் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவினர்களின் சமூக நகர்வு பற்றிய சரியான விவரங்களைப் பெற மத்திய அரசு உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து செல்வப்பெருந்தகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 20.09.2023 அன்று வாக்கெடுப்புடன் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 9.3.2010 அன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது. பின்னர், மசோதாவை அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாவில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்றும், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒக்கீட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் அடங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கான இட ஒத்துக்கீடு இல்லாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் அதிக அளவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் (Other Backward Classes-OBC) பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் இருப்பதிலேயே அந்தப் பிரிவு பெண்களின் முன்னேற்றத்தில் துளியும் அக்கறையில்லாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பது தெளிவாகிறது. ஒ.பி.சி. பிரிவு மக்களை வேண்டுமேன்றே பலிவாங்குகிறது, ஏமாற்றுகிறது பா.ஜ.க. அரசு.

பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர பெரிய அளவில் முயற்சி செய்தவர் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்கள். ஆனால், அந்த மசோதா மாநிலங்களவையில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் பிரதமர் திரு. பி.வி.நரசிம்மராவ் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இன்று நாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும் தேதி குறித்த தெளிவு இல்லாமல் உள்ளது, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே மசோதா அமலாகும் என ஒன்றிய அரசு கூறுவது மிகப்பெரிய துரோகம் ஆகும்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பையே இன்னும் ஒன்றிய அரசு நடத்தவில்லை, ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தவறிய நாடு இந்தியா மட்டுமே. எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகள் என்ற அடிப்படையில் உடனடியாக சாதிவாரியாக மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் மக்கள் தொகையில் அனைத்து வகுப்பினரின் உண்மையான கணக்கீடு தெரியவரும்.
எந்தவொரு சமூக நீதிப் பணியைத் தொடங்குவதற்கான முதல்படி பிரச்சினையின் அளவைப் புரிந்து கொள்வது ஆகும். அதனால்தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மட்டுமே, மக்கள்தொகையில் சாதிவாரியான மக்களின் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவினர்களின் சமூக நகர்வு பற்றிய சரியான விவரங்களைப் பெற முடியும். எனவே, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன் என செல்வப்பெருந்தகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.