மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடைபெறுகிறது என்றும், இந்த மக்கள் சபை கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
முதல் நாளில் மக்கள் சபை கூட்டத்தில் வெறும் 6 வார்டுகளில் மட்டும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன என்று கூறிய அமைச்சர், பெரும்பாலான மனுக்களில் முதியோர் உதவித்தொகை பெற கோரிக்கை வருகிறது என்று கூறினார்.
இந்த மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 234 தொகுதிகளையும் தனது தொகுதிகளாக எண்ணி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது போல் ஐந்து மாதங்களில் வழங்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அதே போல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மின்சாரத் துறையில் உள்ள 50 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.