குடிப்பழக்கத்தால் கணவனை இழந்த லட்சக்கணக்கான பெண்களின் சாபத்தால் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதாக தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:
டாஸ்மாக் கடைகள் மூலம் எத்தனையோ லட்சம் குடும்பங்கள் அழிந்ததன் விளைவாக தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அலுவலகத்தில் சோதனை நடந்த போது, அதிகாரிகள் தங்களது கடமையை செய்கிறார்கள் என அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததற்கு ஸ்டாலின் உள்பட திமுகவினர் கண்டனம் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?.
தலைமை செயலகத்திற்குள் புகுந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் அளவுக்கு திராணி இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். தலைமை செயலகத்தில் நடந்த சோதனை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட தலைகுனிவு. இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தை தான் காட்டுகிறது. செந்தில் பாலாஜி கைது செய்யபட்டிருப்பது லஞ்சம் ஊழலின் உச்சத்தை நிரூபிக்கும் நிகழ்வாகத்தான் மக்கள் இதனை பார்க்கிறார்கள்.
மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது அழுது அலறி துடிப்பது போல் நாடகம் ஆடியுள்ளார். கைது செய்யும் போது செந்தில் பாலாஜி அருகில் இருப்பவர்களை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், தனது ஆடையை சரி செய்து கொள்வதும் தெளிவாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஊழல், தற்போது டாஸ்மாக், மின்துறை என பல லட்சம் கோடி ஊழல் செய்திருக்கிறார். இதனால்தான் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
செய்தி பாலாஜி கைது விவகாரத்தில் திமுக துணை நிற்பது ஏன்?. செந்தில் பாலாஜி மூலம் அனைவரும் பயனடைந்திருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. மேலும் மக்கள் பணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, கைதியை மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தான். எனவே, செந்தில் பாலாஜிக்கு உரிய தண்டனையை அமலாக்கத்துறை பெற்றுத்தர வேண்டும். இதை பார்த்தாவது ஊழல் செய்ய நினைக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பயத்தை உண்டாக்கும்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய திமுகவினர், வேலூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு துணை நிற்காதது ஏன்?. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
சிறுமி விஷ்ணுபிரியாவின் ஆன்மாவின் சாபமும், குடிப்பழக்கத்தால் கணவனை இழந்த லட்சக்கணக்கான பெண்களின் சாபமும் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி விலைவாசி மற்றும் மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தி, லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை திமுக தரவேண்டும் என்பது தான்
தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக தான் தற்போதைய நிகழ்வு பார்க்கப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, சட்டம் ஒழுங்கை கேள்வி குறியாக்கி இருப்பது இந்த நிகழ்வின் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .