செந்தில் பாலாஜி Cash for Job Scam அமைச்சர் என்றால், சிவசங்கர், cash for transfer அமைச்சர் என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்று ஈடுபட்டார். நேற்று பிற்பகல் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் மாரியம்மன் கோயிலின் அருகிலிருந்து யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, பேருந்து நிலையம் அருகே முடித்தார்.
அப்போது பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..
அரியலூரில் மட்டும் நெல், கரும்பு மக்காச்சோளம் என ஒரு லட்சம் ஹெக்டேருக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயர் பெற்ற அரியலூர் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலமாக ஒரு நாளுக்கு ஒரு லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதால், சிமெண்ட் சிட்டி என அழைக்கப்படுகிறது. ஆனாலும், தமிழகத்தின் மிகவும் பிற்படுத்தபட்ட பகுதிகளில் அரியலூரும் ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசு 2017ஆம் ஆண்டு வெளியிட்ட மாவட்டவாரியான மனித வளர்ச்சி குறியீட்டில், கடைசி இடத்தில் இருப்பது அரியலூர் மாவட்டம்.
பாரதத்தில் இருந்து கடத்தப்பட்ட கடவுள் சிலைகளில், 1976 முதல் 2013 வரை, 13 சிலைகள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. ஆனால் நரேந்திர மோடி பிரதமர் ஆனபிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கப்பட்ட அரியலூர் ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் ஆலய நடராஜர் சிலையை, 2014 நவம்பர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.
மேலும்,அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துறையில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல் மட்டும் 2000 கோடி ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சரது ஆட்கள் மூலமாக கமிஷன் வசூலித்து, கோபாலபுரத்துக்கு கப்பம் கட்டி வருகிறார். பதிலுக்கு, அவர் மனைவி நடத்தி வரும், கருத்தரிப்பு மையத்தின் விளம்பரப் பலகைகளை, அரசுப் பேருந்துகளில் வைத்துக் கொள்கிறார்.
குறிப்பாக செந்தில் பாலாஜி Cash for Job Scam அமைச்சர் என்றால், சிவசங்கர், cash for transfer அமைச்சர். வாகன ஆய்வாளர் பதவிகளுக்காக 30 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது புகார் உள்ளது.
தொடர்ந்து பேசிய அவர்,அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை இப்போது அமைச்சர் சிவசங்கர் பிடித்துள்ளார். பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது, பணியிடமாற்றம், நெடுஞ்சாலை உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவது போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இங்கு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-யால் சிதம்பரம் மக்களவை தொகுதி தத்தளித்து வருகிறது. அதை மாற்றி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாஜக ஆதரவு பெற்ற எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.