தமிழக மீனவர்கள் மீதான கடற்படை, கொள்ளையர்களின் அடாவடித்தனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையும், கடற்கொள்ளையர்களும் தொடுக்கும் தொடர் தாக்குதல் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப் பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களை தாக்கி 21 மீனவர்களை கைது செய்தும், அவர்களின் நான்கு படகுகளை பறிமுதல் செய்தும் இலங்கை கடற்படையினர் பெரும் அட்டூழியம் புரிந்துள்ளனர்.
இதையும் படிங்க : அஜித்தின் புது கெட்டப்.. வைரலாகும் பெப்பர் சால்ட் லுக்!
இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடரும் நிலையில், கடற்கொள்ளையர்களின் கொள்ளையடிப்பும் தொடர்கின்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் 420 கிலோ எடையுள்ள மீன்பிடிக்கும் வலைகளை அறுத்து கொள்ளையடித்து சென்று விட்டனர்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்தொழித்து வரும் இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலுக்கும், கொள்ளையடிப்பிற்கும் முற்றுப் புள்ளி என்பதே கிடையாதா, எங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியும் பாதுகாப்பும் இல்லையா என்கிற மீனவர்களின் உள்ளக் குமுறலுக்கு மத்திய அரசு செவி சாய்க்காதா? என்ற வினாவிற்கு விடை தெரிய வேண்டும்!
கடற்படை, கொள்ளையர்களின் அடாவடித்தனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு உடனடியாக தலையீடு செய்திடல் வேண்டும். மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்பவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீன் வலைகளை மீட்டுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.