செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று (Copper T) வந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் என்ற பகுதியில் ஜானகிராமன் – திவ்யா தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், 26 வயதாகும் மனைவி திவ்யாவிற்கு கருத்தடை சாதனம் (காப்பர் T) பொருத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
காப்பர் T (Copper T) கர்ப்பத்தை தடுக்கும் பாதுகாப்பான சாதனம் மற்றும் பயனுள்ள முறை என்பதால், அரசே இதனை பொருத்திக்கொள்ள பரிந்துரை செய்கிறது. இதனால், தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த திவ்யாவும் இதனை பொருத்தி இருந்தார்.
இந்நிலையில், அடிக்கடி திவ்யாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், பொருத்தப்பட்ட சாதனத்தை அகற்றி கொள்ள திவ்யா முடிவெடுத்தார். இதற்காக, நேற்று காலை, மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திவ்யா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து, சரியாக காலை 7.00 மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு திவ்யா அழைத்து செல்லப்பட்டார். ஆனால், காலை 11.00 மணியாகியும், திவ்யாவுக்கு ஆபரேஷன் முடிந்ததா என்று எந்த தகவலும் குடும்பத்தாருக்கு தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், திவ்யாவுக்கு சிகிச்சை தருவதாகக் கூறி மருத்துவர்கள் பரபரப்பாக காணப்பட்டதால், அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் சந்தேகமடைந்து, என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு மருத்துவர்கள், சரியான பதிலை தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த உறவினர்கள், திவ்யாவுக்கு என்ன நடந்தது என்று கேட்டு மருத்துவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
அதன் பிறகு தான், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு திவ்யா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தவறான சிகிச்சை தந்ததால் தான் திவ்யா உயிரிழந்ததாக காவல் துறையினரிடம் அவர்கள் கதறி அழுதுள்ளனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்த தகவல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் சென்ற நிலையில், புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த திவ்யாவின் கணவர் ஜானகிராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்கனவே எங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதால், இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று காப்பர் -டி-யை, திவ்யாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை டாக்டர் சத்தியப்பிரியா பொருத்தினார் எனவும் ஆனால், அதை அவர் முறையாக வைக்கவில்லை என்றும் கூறினார்.
இதனால், உடல்நலத்தில் நிறைய பிரச்சனைகள் வந்த நிலையில், காப்பர் -டியை, வெளியே எடுத்துவிடலாம் என்பதற்காகத்தான், இங்கே வந்ததாகவும், ஆனால், ரமணா படத்தில் வர்ற மாதிரியே 2 டாக்டர்கள் சீரியஸ் காட்டினாங்க.. கடைசியில பிணமாகத்தான் திவ்யாவை காட்டினாங்க” என்று கதறி அழுதார்.. இந்த சம்பவம் மதுராந்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.