குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய (Terrorist organizations) 2 பேர் அளித்த வாக்குமூத்தின் அடிப்படையில், 3 துண்டுகளாக வெட்டப்பட்ட நபரின் உடலை டெல்லி போலீசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதனை முன்னிட்டு டெல்லியில் போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி போலீசார் நடத்திய ரெய்டில் ஜெகஜீத் சிங் மற்றும் நவுசத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், அவர்கள் மேலும், பல குற்ற செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், டெல்லியின் வடக்கு பகுதியான பல்ஸ்வா பகுதியில் காலி மனையில் சோதனையிட்டதில், அங்குள்ள கழிவுநீர் ஓடையில் வீசப்பட்ட, அடையாளம் தெரியாத, 3 துண்டுகளாக இருந்த உடல் ஒன்றை போலீசார் மீட்டு உள்ளனர்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார் என அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், அந்த மர்ம நபர்கள் இருவரும் தங்கியுள்ள வாடகை கட்டிடத்தில் இருந்து 2 கையெறி குண்டுகளும், 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 22 வெடிக்க தயாரான நிலையிலுள்ள தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், பிடிபட்ட ஜக்கா என்ற குற்றவாளிக்கு கனடாவை சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்புடன் (Terrorist organizations) நவுசத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து, தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.