Madurai election field situation : மிரள வைக்கும் மதுரை பாராளுமன்ற தொகுதியின் கள நிலவரம் என்ன..?
ஒருபுறம், சாகித்ய அகாடமி விருது வாங்கிய சிட்டிங் எம்.பி…
மறுபுறம், நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்..
இன்னொருபுறம், மாணவர்களின் வழிகாட்டியாய் திகழும் 2 பேராசிரியர்கள் என மெத்தப்படித்த நால்வர் போட்டியிடும் மதுரை மக்களவை தொகுதியில் இந்த முறை வெல்லப் போவது யார்..?
எத்தனையோ ஊர் இருந்தாலும், ஊருக்கொரு பேர் இருந்தாலும், “எலேய், நாங்க மதுரை காரெங்கெடா..” என கெத்தாக சொல்லுவதில் மதுரைக்கு நிகர் மதுரையேதான். அந்த கெத்தான மதுரை தொகுதியைத்தான் இந்த முறை கொத்தாக அள்ளுவதில் எப்போதையும் விட இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க :
மதுரை மக்களவை தொகுதியைப் பொறுத்த வரை, மதுரை, கிழக்கு – மேற்கு, வடக்கு – தெற்கு – மத்தி மற்றும் மேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தொகுதிகள் மொத்தம் ஆறாக இருந்தாலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் 2 தொகுதிகளில் அதிமுகவும் வென்றுள்ளது.
இங்கு, முக்குலத்தோர், யாதவர் மற்றும் நாயக்கர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன. சிட்டியை பொறுத்த வரை சௌராஸ்டிரா சமூக வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்னயிக்கக் கூடிய அளவில் இருந்தாலும், ஜாதி வாக்குகளை விட, ‘தேர்தலில் நிற்கும் நபரின் தராதரம், அவர் சார்ந்துள்ள கட்சி, அதன் பிறகுதான் ஜாதி’ என தரம் பிரித்து வாக்களிப்பதில் எப்போதுமே கெட்டிக்காரர்கள் மதுரை மக்கள்.
திமுக..
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் முன்னால் அதிமுக மேயரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயாளருமான வி.வி.ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யனுக்கும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சு.வெங்கடேசனுக்கும் தான் போட்டி இருந்தது.
அதில், அதிமுகவின் ராஜ்சத்யனை விட 1 லட்சத்தி 39 ஆயிரத்தி 395 வாக்குகள் அதிகம் பெற்று எம்.பி. ஆனார் எழுத்தாளர் கம் அரசியல்வாதியான சு.வெங்கடேசன்.
அன்று முதல் இன்று வரை மக்களுக்கு செய்ததை விட தன்னை புரொமோட் பண்ணிக்கொள்ள அவர் செய்த காரியங்கள்தான் அதிகம் எனக் கூறுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.
ஆனால், தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் இங்கு போட்டியிடும் சு.வெங்கடேசனோ, “நான் செய்ததை விட மத்திய அரசுக்கு நான் எழுதிய கோரிக்கை கடிதங்கள் ஆற்றிய காரியங்கள் ஏராளம், மாணவர்களுக்கு கல்விக்கடன், அரசுத்தேர்வுக்கு அவர்கள் தயார் செய்து கொள்ள பூங்காக்கள், பொதுமக்களுக்கு ரயில் திட்டங்கள் என இதெல்லாம் நான் கொண்டு வந்ததுதான்.
நெறைய பன்ன்னும்னு ஆசை. ஆனால், நான் சார்ந்த கட்சிக்கு பரம வைரியாக இருப்பது மத்தியில் ஆளும் பாஜக. ஆகவேதான், எனது தொகுதிக்கு எந்த நல்ல திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை. எய்ம்ஸ் பணிகள் தள்ளிப் போனதற்கும் அதுதான் காரணம்” என மத்திய அரசை சாடுகிறார் சு.வெ.
இதெல்லாம், ஒரு புறம் இருந்தாலும், “போன எலக்சன்ல, ‘வரலாறு-வளர்ச்சி-நவீனம்’ என டைட்டில் போட்டு மதுரை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையையும் அதுல 44 உறுதி மொழிகளையும் கொடுத்திருந்தீங்களே, அதுல எத்தனையை சார் செஞ்சீங்க?” என்று மான்புமிகு பொதுஜனம் யாராவது எம்.பி. வெங்கடேசன் தரப்பில் கேட்டால் மழுப்பலே பதிலாக வருகிறது.
ஆனாலும், அடிக்கடி மீடியாக்களில் தலை காட்டியது, மதுரை எய்ம்ஸுக்காக இவர் குரல் கொடுத்தது என இப்போதும் எப்போதும் ‘லைம் லைட்டிலேயே’ இருக்கிறார் திமுக கூட்டணி வேட்பாளரான சு.வெங்கடேசன்.
அதிமுக..
அதிமுக சார்பில் இங்கு போட்டியிடுவது மதுரை மக்களிடையே ரொம்பவே பிரபலமான டாக்டர். சரவணன். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். கொரோனா காலமாகட்டும் மற்ற நேரமாகட்டும், மக்களுக்கு இவர் செய்த உதவிகள் ஞாபகத்தில் இருக்கும். ஆனால், “இப்போ அவரு எந்தக் கட்சிலப்பா இருக்காரு?” என அப்பாவியாக கேட்கும் மதுரை மக்கள்தான் அதிகம்.
காரணம், முதன் முதலில் மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கி, அங்கிருந்து திமுகவுக்கு டைவ் அடித்து, பின்னர் பாஜகவிடம் பாசத்தைக் கொட்டி, பிறகு, தேர்தல் நேரத்தில் அதற்கு டாடா காட்டி, வியர்க்க விறுவிறுக்க தற்போது அவர் ஐக்கியமாகி இருக்கும் கட்சி அதிமுக Madurai election field situation.
அந்த அளவிற்கு “சர்வ கட்சி சரவணன்” என பலராலும் பெருமையோடு அழைக்கப்படும் டாக்டர் சரவணன்தான் அதிமுகவின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர். ஆனால், அவர் கையில் எடுத்திருப்பது சிட்டிங் எம்.பி. சு.வெங்கடேசன் கோட்டை விட்ட திட்டங்களை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஃபார்முலா மட்டும் தான்.
இதையும் படிங்க : 648 கோடிப்பே…வியப்பை ஏற்படுத்திய அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு..!!
“முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்காக விவசாயிகள் போராடியபோது அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.
கிருதுமால் நதியை மீட்பேன் என்று சொன்னார். ஆனால், அது இன்னும் சாக்கடையாகத்தான் உள்ளது. அடிக்கடி கீழடி சென்று சினிமாகாரர்களுடன் போஸ் கொடுத்து, “நான் தமிழ் மண்ணின் மைந்தன்” என்று மார் தட்டுகிறாரே தவிர,
ஒரு எம்.பி.யாக இருந்து சு.வெங்கடேசன் தொகுதி மக்களுக்கு பெரிய திட்டங்கள் என்ன கொண்டு வந்தார்? என்று அவரிடமே கேளுங்கள்” என பந்தை எதிரி கோல் போஸ்டின் பக்கம் எட்டி உதைக்கிறார் டாக்டர் சரவணன். ஆனால், “நல்லா செலவு செய்யிற கையிப்பா இது” என சொற்ப காலத்தில் ரத்தத்தின் ரத்தங்களிடம் டாக்டர் சரவணன் வாங்கியிருக்கும் இமேஜ் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர்களில் ஒரு தரப்பினர் பிஜேபிக்கு தாவியிருக்க, அதிமுகவில் ஒட்டிக் கொண்டிருக்கும் பலரும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக மாறி இருப்பதாக கூறுகிறது மதுரை கள நிலவரம். இந்த உள்ளடிகளை தெரிந்துதான், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக, “மதுரை தொகுதி எனக்குத்தான்” என அடிக்கடி கூறி வந்த அதிமுகவின் ஐ.டி. விங் மாநில பொறுப்பாளரான ராஜ்சத்யன், கடைசி நேரத்தில் சைலன்ட் மோடுக்கு போய் விட்டார். அதன் பிறகே டாக்டருக்கு சீட் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜக..
பாஜக சார்பில் இங்கு போட்டியிடுவது, பேராசிரியர் ராம.சீனிவாசன். தமிழக பாஜகவின் மாநில செயலாளர் என்ற வகையில் பாஜகவினருக்கு அறிமுகமான அளவில் மக்களுக்கு அறிமுகம் இல்லை என்பது மிகப்பெரிய குறை. “இந்த தடவை நான் கட்டாயம் எம்.பி.க்கு நின்னாகனும்” என தலைமையிடம் போராடி சீட் வாங்கியிருக்கிறார். ஆனால், நபார்டு வங்கியின் தனி இயக்குனராக இருக்கும் இவரிடம் செலவு செய்ய ‘வைட்டமின் ப’ அதிகமாக இல்லை என்றாலும், மோடி அலையும், திமுக ஆட்சியின் அதிருப்தி அலையும் தனக்கு பிளஸ் பாயிண்டுகளாக அமையும் என்கிறார் பேராசிரியர் ராம.சீனிவாசன்.
எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை, வந்தே பாரத் ரயில், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000, முத்ரா கடன், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள், 2 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு 4 வழிச்சாலைகள் இப்படி பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு மூலமாக தான் தமிழகத்துக்கு வந்தன. இது அத்தனையும் தந்தது மோடிதான்” என்று கூறி எதார்த்த பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார் பேராசிரியர் ராம.சீனிவாசன்.
இவர்களுக்கு மத்தியில், யாருடனும் கூட்டணி இல்லை’ என தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரை மக்களவை களத்தில் வாக்கு வேட்டையாடி வருகிறார் மதுரை தியாகராயர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசியரான முனைவர் மோ.சத்யா தேவி.
தமிழகத்தில் மட்டும் சில மத்திய அரசு திட்டங்களில் மெத்தனப் போக்கு, ஆளுங்கட்சியான திமுகவின் அரசியல் ஸ்டண்ட், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைச் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கும் அதிமுக என.. திமுக, அதிமுக பாஜக ஆகிய சகல கட்சிகளையும் எதிர்த்து நின்று தங்களுக்கு வழங்கப்பட்ட மைக் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் மனதில் அரியாசனம் போட தயாராகி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளரான பேராசிரியர் சத்யா தேவி.
இப்படி, போட்டியிடும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவில் மிதந்தாலும், மதுரை மக்களின் கனவோ ஆண்டாண்டு காலமாக வெறும் கானல் நீராகவே இருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை Madurai election field situation.
வசதியான வாக்காளர்கள் வாழும் எஸ்.எஸ். காலனியாகட்டும், தொழிலாளி வர்கங்களின் தத்தனேரி, அருள்தாஸ் புரம் ஆகட்டும், பட்டியல் இன மக்களின் கோட்டையான மேலவாசல், சுப்பிரமணியபுரம், சிம்மக்கல் ஆகட்டும், அதையும் தாண்டி புறநகர் பகுதிகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் மதுரையின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது குண்டும் குழியுமான சாலைகளும், போக்குவரத்து நெரிசலும் தான்.
இதில் பெரிய கொடுமையே வைகை பாய்ந்தோடும் இங்கு குடி தண்ணீர் பிரச்சனையும் சேர்ந்து இருப்பதுதான். எனவே, இந்த முறை ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அதாவது, இந்த பகுதிகளில் யார் வாக்கு கேட்டு வந்தாலும், சாலை, போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரிசனைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுப்பேன். முடியாவிட்டால் ராஜினாமா செய்வேன் என 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்துப் போட்டுத்தாருங்கள்.
அதை சீர் தூக்கிப் பார்த்து ஓட்டுப் போடுகிறோம் என 20 ரூபாய் வெத்துப் பத்திரத்துடன் காத்திருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள். இதெல்லாம் சீர் செய்யக்கூடிய பிரச்சனைகளாக இருந்தாலும், இதுவரை இங்கு எம்.பி.யாக இருந்த எவரும் இவற்றை சரி செய்ய உருப்படியான முயற்சிகள் எதுவுமே எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இருப்பினும், மார்ச் 27ஆம் தேதி கள நிலவரப்படி போட்டியில் முன்னணியில் இருப்பது வேட்பாளர் சு.வெ. தான்..!
இனி வரும் நாட்களில் இந்த மதுரை மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றிவாகை சூடப்போவது யார் என்பது போகப்போக மட்டுமே தெரியும்..!
பாஜக, அதிமுக, திமுக இவர்களுக்கிடையே என பலரும் போட்டியிடும் இந்த அரசியல் களத்தில் இந்த முறை வெற்றி வாகை சூட அனைவருமே பரபரப்பாக இயங்கி வரும் நிலையில்,
• பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக..
• சட்டமன்ற தொகுதிக்குள் உள்ள ஒன்றியங்கள் வாரியாக..
• அந்த ஒன்றியங்களில் வாழும் மக்களின் மனதில் ஒளிந்துள்ளது என்ன? என்பதை துள்ளியமாக அறிய களமிறங்கி இருக்கிறது நமது I TAMIL NEWS சிறப்பு சர்வே குழு.
விரைவில் வெளியாக இருக்கும் அவர்களின் சர்வே ரிப்போர்டை அடுத்தடுத்த நமது நிகழ்ச்சியில் காண்போம். அதுவரை இணைந்திருங்கள் நம்மோடு!
இதையும் படிங்க : மிரள வைக்கும் மதுரை பாராளுமன்ற தொகுதியின் கள நிலவரம்!