சிக்கிம் மாநிலத்தில், அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு ஊதிய உயர்வு (reward) வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில், சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் இருக்கிறது.
இதன் காரணமாக, அம்மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அம்மாநில அரசு அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
அதாவது, அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் ஒருமுறை ஊதிய உயர்வும் (reward), மூன்றாவது முறை குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என மாநில முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்து உள்ளார்.
மேலும், இதுகுறித்து முதல்வர் பிரேம் சிங் தமங் கூறுகையில், சிக்கிம் மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதால் இதை கணக்கில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என கூறி உள்ளார்.