நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் டைப் செய்தபடியே வேலை பார்ப்பவர்களும், வீட்டு வேலைகளை அதிக நேரம் செய்பவர்களுக்கும் பொதுவாக மணிக்கட்டு (wrist pain) பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும்.
இதனால், எந்த வேலையையும் பார்க்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் வழக்கமான உடற்பயிற்சிகளோடு சேர்த்து மணிக்கட்டு வலியை (wrist pain) குறைப்பதற்கு சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கைகள் உறுதியாக இருக்க மணிக்கட்டுகள் தான் முதலில் வலிமையாக இருக்க வேண்டும். எனவே, இதற்கான பயிற்சிகள் சிலவற்றை பார்க்கலாம்.
முதலில் உள்ளங்கைகளில் விரல்களை அழுத்தி, பத்து தடவைக்கு மேல் மூடி மூடி திறக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் மூச்சை உள்ளே இழுத்து, மூச்சை வெளியே விடும் பொழுது உங்களது கைகளை திறந்து விரல்களை அகலமாக விரித்து வைக்க வேண்டும்.
அடுத்ததாக, உங்களது விரல்கள் அனைத்தையும் மூடிக் கொண்டு மேலும் கீழும் கடிகார திசையில் சுமார் 10 முதல் 15 வினாடிகளுக்கு சுழற்ற வேண்டும். இதை ஒவ்வொரு திசையிலும் பத்து முறை செய்ய வேண்டும். குறிப்பாக, நீங்கள் இதை கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. எதார்த்தமாக இந்த பயிற்சியினை செய்ய வேண்டும்.
இதனால் உங்களுடைய கைகளுக்கு வலிகள் ஏற்படுவது குறையும்.
அடுத்ததாக உங்களுடைய முதுகை நேராகவும், தோள்களை தளர்வாகவும் வைத்து இயல்பான நிலையில் உட்கார்ந்து கொண்டு இல்லை எனில் நின்று கொண்டு இந்த பயிற்சியினை செய்யலாம். கைகுலுக்குவது போல உங்களது கைகளை சேர்த்து வைத்துக் கொண்டு கைகளை சுழற்ற வேண்டும்.
தண்ணீரில் மீன் வளைந்து செல்வதை போல உங்களுடைய கைகளை இடமிருந்து வலமாகவும், வலம் இருந்து இடமாகவும் சுழற்ற வேண்டும். கடைசியாக, கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உள்ளங்கைகளை நன்றாக விரித்து உடலை தாங்கிக் கொள்ளும்படி வைக்க வேண்டும். அதன் பின்னர், உடலை முழுவதுமாக சுற்ற வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மணிக்கட்டில் ஏற்படும் வீக்கமும், வலியும் குறையும்.