சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில். இன்று கிச்சநாயக்கன்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்தவர்கள் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை அறைக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே பட்டாசு வெடி விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் மண்குண்டாம்பட்டியில் ஆர்.எஸ்.ஆர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், கடந்த வாரம் அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.