சிவகாசி அருகே வெவ்வேறு இடங்களில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்த ராமசாமி என்பவற்றின் 43 வயது மகன் கணேச மூர்த்தி. இவர் ரெங்கபாளையம் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலையும் அதனுடன் பட்டாசு விற்பனை கடையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.
இன்று பட்டாசு ஆலையில் பணிபுரியும் சுமார் 15 தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனிடையே உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து சோதனை செய்து பார்த்து உள்ளனர். அப்போது அருகே இருந்த பட்டாசு விற்பனை கடையில் தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு கடையில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி அருகேயுள்ள, மங்களம் கிராமம் ஆகிய இரு வேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.