மும்பையில், பிரிந்த மனைவி திரும்பி வரவேண்டும் என மாந்திரீகரிடம் சென்று அது பலன் அளிக்காத ஆத்திரத்தில் மாந்திரீகம் (witchcraft) செய்த மந்திரவாதியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பால்காரில், கடந்த மே 25-ந் தேதி சாலை ஓரத்தில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
அதையடுத்து, காவல் துறைக்கு தகவல் அளித்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் பெயர் பிவா பிக்யா வைதா என்பது தெரியவந்தது.
மேலும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்த போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இதற்காக, முதல்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிர்சாத் கிராமத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
உயிரிழந்த பிவா பிக்யா வைதா ஒரு மந்திரவாதி என்றும், அவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற தனது மனைவி மனம் மாறி தன்னுடன் இணைய வேண்டும் என்பதற்காக சில மாந்திரீக பூஜைகளை (witchcraft) செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதற்காக அவருக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும் ஆனால், அவர் கூறியபடி தன் மனைவி மனம் மாறவில்லை என்றும், அதனால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாகவும்,
அதன்படி கடந்த மே 24-ந் தேதி மந்திரவாதியை மது குடிக்க அழைத்து சென்று அங்கு வைத்து சிமெண்டு கல்லால் அவரை தலையில் தாக்கி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.