கழக இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் திமுக மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறித்து Speaking for India என்ற நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியிருக்கிறேன்.
தமிழிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அந்த உரையை ள்பிறப்புகளாகிய நீங்கள் எல்லோரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
நீட் எனும் கோடரிக்கு எதிராகத் தம்பி உதயநிதி அவர்கள் கழக இளைஞரணி -மாணவரணி-மருத்துவ அணியை இணைத்து தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தக் கையெழுத்து இயக்கத்தில், கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் பங்கேற்று கையெழுத்திடுவது மட்டுமின்றி, அவரவர் பகுதியில் உள்ள பொது மக்களிடமும் மாணவர்களிடமும் நீங்கள் கையெழுத்தைப் பெற வேண்டும்.
இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் நடைபெற உள்ள இளைஞரணியின் மாநில மாநாட்டை கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது.
அதற்குப் பாக முகவர்களும், பூத் கமிட்டியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்போரும் வாரம் ஒரு முறையேனும் தொகுதிக்குச் சென்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க.வின் கைகளிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.
பாஜகவுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கு மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு. இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அ.தி.மு.க.வின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம்.
அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் கானாட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்! என குறிப்பிட்டுள்ளார்.