heat wave : இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் அலை வீசி வருகிறது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லி, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது.
கடுமையான வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகார் மாநிலம், ஷேக்பூராவில் உள்ள பள்ளி ஒன்றில் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் பள்ளி மாணவ, மாணவியர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவ,மாணவியர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயக்கமடைந்த மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து சதார் மருத்துவமனை மருத்துவர் ரஜினிகாந்த் குமார் கூறுகையில்,
“வெப்பம் அதிகரித்து (heat wave) வருவதால், மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
வெப்ப அலையால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நலமாக உள்ளனர்.
இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க மாணவர்கள் எப்போதும் நீர்ச் சத்துடன் இருக்க வேண்டும். அவர்களால் முடிந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெப்பத்தில் வெளியே வராமல் இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் மாணவர்கள் அனைவரும் தண்ணீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.