வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் தூங்காமல் இருப்பதற்காகவும், விபத்துகளை தடுக்கும் வகையிலும், நாம் அணியக்கூடிய கண்ணாடியில் Anti- Sleep Alarm System என்ற ஒரு சாதனம் பொருத்தும் வகையில் மத்திய பிரதேச பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனத்தை கண்டுபிடித்து உள்ளார்கள்.
இந்த சாதனத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் பொழுது அவர்கள் அணியும் கண்ணாடியுடன் சேர்த்து இந்த சாதனம் (anti sleep alarm system) பொருத்தப்பட்டிருக்கும். இதில், இருக்கும் சென்சார் வாகன ஓட்டிகளின் கருவிழியை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்.
ஒருவேளை வாகனத்தை ஓட்டுபவர் தன்னை மறந்து தூங்கிவிட்டார் எனில் ஐந்து வினாடிகளுக்கு மேல் அவர்களுடைய கருவிழி சென்சாரில் தெரியவில்லை என்றால் சென்சாரின் செயல்முறை ஆரம்பமாகி எச்சரிக்கை மணியை ஒலிக்கும்.
அப்பொழுதும் ஓட்டுநர் கண்களை திறக்கவில்லை என்றால், அவர் ஓட்டும் வாகனம் தானாக நின்று விடும். இந்த சாதனத்தால் திடீர் என்று வாகனம் நிறுத்துவது அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்மறையான கருத்துக்கள் ஒரு பக்கம் வந்தாலும், மாணவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சாலை விபத்துகளை தடுப்பதற்கான சரியான முயற்சி என்றும் நேர்மறை கருத்துக்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனாலும், சீட் பெல்ட் அணியவே மறந்துவிடும் சில வாகன ஓட்டிகள், எப்படி இந்த சென்சார் கண்ணாடியை மறக்காமல் வாகனம் ஓட்டும் பொழுது அணிந்து கொண்டு செல்வார்கள் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.