2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று இரவு வானில் தோன்ற உள்ளது. இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்தாண்டில் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்றைய தினம் மிகப் பிரகாசமாக தெரிய உள்ளது. இந்த பெரிய நிலவிற்கு ‘பக் சூப்பர் மூன்’ , ‘தண்டர் மூன்’ ‘ஹே , மெட் மூன்’ என பெயரிட்டுள்ளனர். பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். அப்போது வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும்.
இன்றைய தினம் நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் தெளிவாக காணப்படும். இந்த நிகழ்வை உலகின் எல்லா பகுதிகளிலும் பார்க்க முடியும்.
நாசாவின் அறிக்கையின்படி, இன்று புதன்கிழமை பிற்பகலில் இருந்து சூப்பர் மூன் வெளிப்படும். சூரியனுக்கு எதிராக வெளிப்பட்டு பூமிக்கு நிலவு காட்சியளிக்கும். நாசாவின் கணக்கின்படி, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வானில் இருக்கும்.
இன்றைய தினம் தோன்றும் பக் சூப்பர் மூன், ஏறக்குரைய 6ஆயிரம் கி.மீ குறைவாக பூமிக்கு அருகே வருவதால், வழக்கத்தைவிட பெரிதாக நிலவு தோன்றும்.
சூப்பர் மூன் நிகழ்வால் கடல், பெருங்கடல்களில் சில இடங்களில் அதிக அளவில் அலைகள் மேலெழும்பும். வானியலாளர்களின் கூற்றுப்படி, இந்த நேரத்தில் கடலின் கொந்தளிப்பால் கடலோர கிராமத்தில் தண்ணீர் உள்ளே புக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.