நடிகர் சூர்யா (surya) இந்தியில் உருவாகும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் “நேருக்கு நேர்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சூர்யா (surya) இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா நடிப்பில் கடந்தாண்டு ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானதைத் தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.
அதேபோல் நடிகர் மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சூர்யாவின் 42வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது
அந்த அறிவிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்னும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், கங்குவா படம் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில், மகாபாராத கதையில் வரும் கர்ணன் கேரக்டரை மையப்படுத்தி இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாகும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது உறுதியானால் சூர்யா இந்தியில் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். மேலும், இந்த படம் பான் இந்திய படமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.