சட்லஜ் (sutlej) ஆற்றில் மாயமான தனது மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னை முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சைதை துரைசாமி.
அதிமுகவைச் சேர்ந்த இவர், தற்போது அதிமுக தொடர்பான எந்த கட்சி நிகழ்விலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
இவரது மகன் வெற்றி. இவர் தனது தந்தை சைதை துரைசாமியுடன் இணைந்து சைதை துரைசாமி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேய அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்ற நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர்கள் லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் (sutlej) ஆற்றில் கவிழ்ந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசாருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், காரை ஓட்டிய தன்ஜின் என்பவர் சடலமாக மீட்கப்பட்ட மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட ரத்தக்கரை உள்ளிட்டவற்றை கொண்டு பரிசோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சில இடங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக சைதை துரைசாமியின் மகன் குறித்து தகவல் அறிய 2 நாளாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்த தந்தை சைதை துரைசாமி இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : Himachal accident : சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றி- தேடும் பணி நிறுத்தம்!
இந்த நிலையில், மகனுக்காக இமாச்சல பிரதேசத்தில் காத்திருக்கும் சைதை துரைசாமி, தனது மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய் சன்மானம் குறித்த தகவலையும் மகனின் புகைப்படத்தை காண்பித்து சட்லெஜ் நதிக்கரையோரம் வசிக்கும் பழங்குடி மக்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறும் சைதை துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.