tada abdul rahim -திமுக கூட்டணியில் இல்லாத தனது புகைப்படத்தை போஸ்டரில் போட்டு விளம்பரம் தேடிக் கொள்வது ஏன் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் தனது எக்ஸ் வலைதளத்தில் திமுகவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் செயல்வீரர்கள்கூட்டம் நடத்தி இருக்கிறார். இதற்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டரில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், காயிதே மில்லத் என்று மறைந்த தலைவர்களின் புகைப்படங்களோடு வைகோ, வீரமணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா என கூட்டணிக் கட்சித்தலைவர்கள் 23 பேர் புகைப்படத்தையும் அச்சிட்டுள்ளனர்.
இந்த கூட்டணிக்கட்சித் தலைவர்களின் புகைப்பட வரிசையில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவரான தடாரஹீம் புகைப்படத்தையும் சேர்த்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தடா ரஹீம், திமுகவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசின் சமுதாய விரோத செயல்களை பொதுத் தளத்தில் எதிர்த்து வருகின்றேன்.
அந்த வகையில் இந்திய தேசிய லீக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு நிலை எடுத்து அதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டோம். இப்படி இருக்கையில் திமுக வேட்பாளர் செயல்வீரர்கள் கூட்ட போஸ்டரில் எனது புகைப்படம் எதற்கு போடனும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.