தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது இருப்புப் பாதையில், இறுதிகட்ட சாலை மேம்பாலப்பணிகள் முடிந்து, செங்கல்பட்டு-தாம்பரம் மாா்க்கத்தில் பயணிகள் இல்லாத முதல் மின்சார ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
இந்தப் பாதையில் ஓரிரு நாளில் மின்சார ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரூ.256 கோடி திட்ட மதிப்பில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 3 கட்டங்களாகப் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதிக்காட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.
இதுதவிர, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே குறுகிய பாதையில் இருந்த சாலை மேம்பாலத்தை விரிவுப்படுத்தவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தசாலை மேம்பாலப் பணி அண்மையில் முடிந்தது.
தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் சாலை மேம்பாலப் பணிமுடிந்து, செவ்வாய்க்கிழமை பயணிகள் இல்லாத 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் இந்தப் பாதையில் ஓரிரு நாளில் மின்சார ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.