நடிகர் அஜித் தொலைப்பேசி வாயிலாக அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது.
இதன்மூலம் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ,பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும்,அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.இந்த நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் நடிகர் அஜித்திற்கு இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் தொலைப்பேசி வாயிலாக நடிகர் அஜித்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தனது வாழ்த்துகளையும் நடிகர் அஜித் தெரிவித்து கொண்டுள்ளார். தற்பொழுது இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.