இந்திய செஸ் வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த வைஷாலி(22) அதிகாரப்பூர்வமாக ‘செஸ் கிராண்ட்மாஸ்டர்’ என அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்த்தை இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி பெற்றார் . அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை பெற்றார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபன் தொடரில் 2 வெற்றிகளைப் பதிவு செய்து 2,501.05 ‘எலோ’புள்ளிகளை (Elo Rating) கடந்தார்.
ஆனால் அவருக்கு கிராண்ட்மாஸ்டர் எனப்படும் பட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் அணி…. தமிழகத்தைப் புறக்கணிக்கிறதா BCCI?
இதனை தொடர்ந்து கடந்த மாதம் கனடா டொராண்டோ நகரில் நடைபெற்ற பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வைஷாலி, ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோர் தமிழகத்திலிருந்து பங்கேற்றனர். இந்த தொடரில் டி.குகேஷ் வெற்றி பெற்றார்.
இந்த தொடரின் போது சர்வதேச செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) கவுன்சில் கூட்டத்தில் வைஷாலிக்கு, கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கியது. இதன் மூலம் இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக அதிகாரப்பூர்வமாக தேர்வு வைஷாலி தற்பொழுது செய்யப்பட்டுள்ளார் .
மேலும் தமிழகத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைஷாலி ,”எனது குடும்ப உறுப்பினர்கள் வழங்கி வரும் ஆதரவால் என்னால் இது போன்று சாதிக்க முடிகிறது. சிறு வயதில் நானும் எனது தம்பி(பிரக்ஞானந்தா) ஆகிய இருவரும் செஸ் விளையாட்டு குறித்து நிறைய பேசுவோம், இது இன்னும் தொடர்கிறது.
பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றவுடன் விரைவில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுவிடலாம் என நினைத்தேன், ஆனால் கரோனா காரணமாக நிறைய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் தற்போது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.