கிருஷ்ணகிரியில் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தினேஷ், ஜனகநந்தினி ஜோடி, தங்களது திருமண வரவேற்பை மெட்டாவெர்ஸ் எனும் தொழில்நுட்பம் மூலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில், தினேஷ், ஜனகநந்தினி ராமசாமி ஆகியோர் பிப்ரவரி 6 அன்று திருமணம் செய்துகொள்ள உள்ளனர். தனது திருமண வரவேற்பு நிகழ்வை புதுமையுடன் நடத்த தொழில்நுட்ப வல்லுநரான தினேஷ் திட்டமிட்டிருக்கிறார்.
தினேஷ் மற்றும் ஜனகநந்தினி ஜோடி, தங்களது திருமண வரவேற்பை மெட்டாவேர்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இணையம் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தினேஷ், ” நாட்டிலேயே மெட்டாவெர்ஸில் திருமணம் செய்து கொள்ளும் முதல் ஜோடி நாங்கள்தான். கடந்த ஒரு வருடமாக பிளாக்செயினில் பணிபுரிந்து வருகிறேன். அதனால் எனக்கு அதில் அனுபவம் அதிகம். கிரிப்டோ பற்றி அதிகம் தெரியும். மெட்டாவெர்ஸ் என்பது பிளாக்செயினில் செயல்படும் ஒரு தொழில்நுட்பம்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், யூடியூபில் மெட்டாவேர்ஸ் குறித்து ஒரு வீடியோவைப் பார்த்த போது, மெட்டாவேர்ஸில் ஏன் ஒரு நிகழ்வைச் செய்ய முடியாது என்று நினைத்ததாக கூறிய அவர் ஒரு நிகழ்வை நடத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைவரும் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள் என நினைத்ததாக கூறினார்.
மணப்பெண்ணின் தந்தை கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதனால், அவரது டிஜிட்டல் அவதாரத்தை வரவேற்பறையில் வைக்கவும் திட்டமிட்டுள்ளார்