தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பித்தது. அப்போது ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நவ. முதல் வாரம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 5-ந்தேதி புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாகி உள்ளது.
மாண்டஸ் புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் தென்மேற்கு வங்க கடலில் இருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 580 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 500 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 85 கிமீ வரையிலும் கூட காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை வடகடலோர தமிழகம், புதுச்சேரி, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இது டிச.10ஆம் தேதி லேசான மழையாகக் குறையும். அதேநேரம் டிசம்பர் 10ஆம் தேதி வட தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவைக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக வேலூர் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். அதே போல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது